கட்டுரை

பா.ஜ.கவின் வெற்றி எளிதாக இருக்குமா?

Staff Writer

வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி நம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதியவரைத்  தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளுக்குக் கட்சிகள் தயார் ஆகின்றன. பொதுவாக ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்றாலும் அதற்கான ஏற்பாடுகள், பேரங்கள் எல்லாம் மிகுந்த அழுத்தத்துக்கு இடையில் நடைபெறுகின்றன.

 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அத்துடன் 31 மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். 1974 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு சட்டப்படி இந்த வாக்குகளுக்கு மதிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது மொத்தம் 784 எம்பிகள் உள்ளனர். 4,114 எம்எல்ஏக்கள் உள்ளனர். எம்பிகளின் ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பு 708. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு வாக்குக்கும் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள மக்கள் தொகை என்ன என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு அதிக மக்கள் தொகை உடைய உபி மாநில எம் எல் ஏவின் வாக்குக்கு உள்ள மதிப்பு 208. குறைந்த மக்கள் தொகை உடைய சிக்கிம் மாநில எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 7.

ஆக இவர்களெல்லாம் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுத்து வாக்களிப்பார்கள். அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் குடியரசுத் தலைவர் ஆவார். மொத்தமாகச் சேர்த்தால் 10,98,000 என்பது இந்த வாக்குகளின் மதிப்பு. வெல்வதற்கு இதில் பாதியான 549001 என்கிற இலக்கத்தைப் பெறவேண்டும்.

இப்போதைய நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளின் மொத்த செல்வாக்கு எப்படி உள்ளது?

ஆளும் பாஜக நல்லப் பெரும்பான்மையுடன் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் மாநிலங்களவையில் அதற்குப் பெருமான்மை இல்லை.  அதனால் சற்று இறுக்கமான நிலையிலேயே குடியரசுத் தலைவர் தேர்தலை அது எதிர்கொள்ளும். ஆனாலும் உத்தரபிரதேசத்தில் பெற்ற வெற்றிக்கும் பின்னர் பாஜக  சட்டைக்காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கிறது. இன்றைய தேதிக்கு அது தலைமை வகிக்கும் கூட்டணியான தேசிய ஜனநாயகக்கூட்டணியின் வாக்கு சதவீதம்  48. 64%  ஆக இருக்கிறது. எதிரணியான காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 35.47% ஆக இருப்பதாக சமீபத்தில் எகனாமிக் டைம்ஸ் இதழில் கணித்திருந்தார்கள். ஆனால் இதில் ஒரு சிக்கல். இந்த இரண்டு அணியையும்   சேராமல்   இருக்கக்கூடிய கட்சிகளான அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐஎன்எல்டி, போன்ற கட்சிகள் 13 சதவீதம் வாக்குகளை வைத்துள்ளன. இக்கட்சிகள் எந்த அணியின் வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்பது முக்கியமாகக் கருதப்படும். இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அறிவிக்க முன்வந்தால் போட்டி மிகவும் கடுமையாகிவிடும்.

ஆனால் இந்த கட்சிகளில் ஏதாவது ஒன்று மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க முன்வந்தால் கூட போதும். தே.ஜ. கூட்டணி வேட்பாளர் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார். ஆகவே இக்கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இரு அணிகளுமே கடுமையாக முயற்சி செய்யும்.

 “அதிமுக சார்பில் இருக்கும் எல்லா வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு பாஜக செய்யும் எல்லா முயற்சிகளையும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ஒரு மூத்த அரசியல் விமர்சகர்.

ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன்பட்நாயக், பாஜகவுடன் நல்லுறவில் இல்லை. அவர் இதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பார். 2012-ல் நடந்த குடியரசுத் தேர்தலில் தேஜகூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிஏ சங்மாவுக்கு இவர்தான் முதலில் ஆதரவு தந்தார். அதனால் தன் பிரச்சாரத்தை முதலில் புவனேஸ்வரத்துக்குச் சென்று அங்கிருந்துதான் சங்மா தொடங்கினார். அவருக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஆதரவாக இருந்தார் என்பது நினைவு கூரத்தக்க விஷயம். ஆனால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி நிறுத்திய பிரணாப் முகர்ஜி அமோகமான வெற்றியைப் பெற்றார். கர்நாடகத்தில் அப்போது பாஜக ஆளுங்கட்சியாக இருந்தது. ஆனாலும்கூட சில பாஜக எம் எம் ஏக்கள் கட்சியின் கட்டளையை மீறி பிரணாப் முகர்ஜிக்கே வாக்களித்தார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் அரசியல் புகுந்து, பேரங்கள் நடைபெறுவதாக தோல்விக்குப் பின்னர் சங்மா புலம்பித் தீர்த்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் சில மாநில அரசுகளின் ஆதரவைப் பெறுவதற்காக மத்திய அரசு  சார்பில் அம்மாநிலங்களுக்கு

சிறப்பு நிதி அளிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ‘சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று சொன்ன நரியின் கதையை சங்மா ஞாபகப்படுத்துகிறார்’ என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சொல்லி அவரது குற்றச்சாட்டைப் புறந்தள்ளினார்.குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் கட்சிகளிடம் இப்போதே ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திருணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஒடிஷாவின் நவீன் பட்நாயக், பீஹாரின் நிதீஷ் குமார் ஆகிய மூவரும் இது தொடர்பாக ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. நிதீஷ்குமார், சீதாராம் யெச்சூரி ஆகியோர் சோனியாவிடம் ஆலோசனை நடத்தி உள்ளனர். இடதுசாரிகள்,  எதிர்க்கட்சியினர் பொதுவேட்பாளரை அறிவித்தால் ஆதரவு தெரிவிக்கும் முடிவில் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கே ஆதரவு தருவார் என்று சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் சார்பில் யார் நிறுத்தப்படலாம்?

சரத்பவார், மீராகுமார், மன்மோகன் சிங், ஷரத் யாதவ் போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. சரத்பவார் நிறுத்தப்பட்டால் மராட்டியர் என்பதால் சிவசேனா அவரை ஆதரித்து பாஜகவுக்கு நெருக்கடி தரும் என்பது எதிர்பார்ப்பு. இப்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி பெயரும் அடிபடுகிறது. ஒரு வேளை பிரணாப் முகர்ஜியையே திரும்பவும் நிறுத்திப்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கண்டிப்பாக வெல்வோம் என்று தெரியாத பட்சத் தில் பிரணாப் முகர்ஜி போட்டியில் இறங்குவது அவரது பதவிக்கு அழகாகாது என்பதால் அவர் போட்டியிடமாட்டார் எனலாம்.

ஆளுங்கட்சி சார்பில் யார் நிறுத்தப்படலாம்?

பிரதமர் மோடி தனது குருதட்சணையாக அத்வானிக்கு குடியரசுத்தலைவர் பதவியை வழங்குவார் என்று பேசப்பட்டுவந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை அவருக்கு எதிராக, பாபர் மசூதி வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று 25 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு கலைத்துப்போட்டுவிட்டது. அத்வானி இல்லாத பட்சத்தில் சுஷ்மா ஸ்வராஜ், முரளிமனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. தற்போதைய ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவின் பெயரும் ஆச்சரியகரமாக இந்த பட்டியலில் அடிபடுகிறது.

 முர்மு ஒடிஷாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண் தலைவர். 59 வயதாகும் அவர் நல்ல அனுபவம் பெற்றவர்தான். இதுவரையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த யாரும் குடியரசுத்தலைவர் ஆனதில்லை என்பது அவருக்கு பலமாக இருகிறது.

அமிதாப்பச்சன் பெயரும் நம் ரஜினிகாந்த் அவர்களின் பெயரும்கூட சமீபகாலத்தில் ஊடகங்களில் அடிபட்டது நினைவில் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பெயரும் கூட உச்சரிக்கப்பட்டது. ஆனால் அவர் இதை மறுத்துவிட்டார். பாஜக எந்த பெயரை முன்மொழிவதாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கலந்தாலோசிக்கப்படும் என்பதும் இங்கு கவனிக்கவேண்டிய செய்தி.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிஏ சங்மாவை சென்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் முன்னிறுத்தியதில் ஜெயலலிதாவுக்கும் ஒரு பங்கு இருந்தது. இன்றைக்கு 5.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கும் அதிமுக, ஜெயலலிதா இல்லாத நிலையில் என்ன முடிவு எடுக்கும்? யார் முடிவெடுப்பார்கள் போன்ற கேள்விகள் அனைத்தும் திறந்த நிலையில் உள்ளன. திமுக,  காங்கிரஸ் கட்சி வேட்பாளரையே ஆதரித்து தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்.

நாட்டின் முதல்குடிமகன் ஆகப்போவது யார்? என்பதற்கான அதிகாரபூர்வமான பலப்பரீட்சை விரைவில் தொடங்கும். அதுவே 2019-ல் வர இருக்கும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பலப்பரீட்சையின் முதல் அடியாகவும் விளங்கும்.

மே, 2017.